சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அதன்படி பிளாஸ்டிக் பைகளை புறக்கணித்து துணிப்பைகளின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.  தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரைக்கான நிகழ்ச்சியை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சென்னை கலைவாணர் அரங்கில்  ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, தடையை நடைமுறைப்படுத்தும் பணியில் தேக்கம் ஏற்பட்டது. தற்போது இதனை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணியில், தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்படக் கண்காட்சியும் கலைவானர் அரங்கத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இதையும் முதலமைச்சர் பார்வையிட்டார். இந்த கண்காட்சி மாலை 7 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.