சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கும் அவர் பிரதமர் உள்பட மத்தியஅமைச்சர்களை சந்திப்பதுடன், எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். இதனால் ஸ்டாலின் டெல்லி விசிட் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஏப்ரல் 2ந்தேதி திறகப்பட உள்ளது. இதற்காக ஏப்ரல் 1ந்தேதி திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணமாகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சோனியாகாந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், பாஜக அமைச்சர்கள் அமித்ஷா உள்பட பலருக்கும், பாஜக தேசிய தலைவர்  ஜே.பி. நட்டாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 1ந்தேதி அன்று டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, கவர்னர் கிடப்பில் போட்டுள்ள நீட் விலக்கு மசோதா விவகாரம், மேகதாது ஆணை, தமிழகத்திற்கு தேவையான நிதி, வெள்ள நிவாரணம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 1ந்தேதி அன்று திமுக அலுவலகத்தை திறந்து வைக்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், முதல்வரின் டெல்லி பயணமா பரபரப்பாக பேசப்படுகிறது. தொடர்ந்து,  இரண்டாம் தேதி இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இதற்கிடையில், டெல்லி  கட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் தவிர வேறு யாரும் வர வேண்டாம் என திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.