சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ந்தேதி அரசு முறை பயணமாக ராமநாதபுரம் செல்லும் நிலையில், வழக்கமாக நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியூர் பயணத்தின்போது மேற்கொள்ளும் ரோடு ஷோ நிகழ்ச்சி கிடையாது, அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கியுள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அத்துடன் திமுக நிர்வாகிகளை சந்தித்தும் கட்சி தொடர்பான ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கள ஆய்வின்போது, ஏற்கனவே முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும்ட அடிக்கல் நாட்டி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, செம்பம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் காரணமாக முதலமைச்சரின் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணம் மற்றும் ரோடு ஷோ தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட ராமநாதபுரம் நிகழ்ச்சி அக்டோபர் 2 மற்றும் 3ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் நடைபெறவிருந்த ரோடு ஷோ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (2-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் (3-ந்தேதி) காலை காரில் புறப்பட்டு ராமநாதபுரத்தையடுத்த பேராவூர் அருகே அமைந்து உள்ள புல்லங்குடி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு 55 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பேசுகிறார்.
விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.