சென்னை: மாவட்டம் தோறும் கள ஆய்வுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 27, 28ம் தேதி விழுப்புரத்துக்கு  செல்கிறார். இதையொட்டி,  முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்யும் வகையில்,  மாவட்டந்தோறும் களஆய்வு நடத்தி வளர்ச்சி திட்டபணிகள் குறித்து ஆய்வு செய்தும், முடிவுற்ற நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து வருகிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்  வருகிறார். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறார்.

இதற்கிடையில், முதலமைச்சர் ஸ்டாலின் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம்  விழுப்புரம் மாவட்டத்திற்கு கள ஆய்வு செல்ல செல்வதாக இருந்தது.  ஆனால் பெஞ்சல் புயல் அதனால் ஏற்பட்ட  வெள்ளம் காரணமாக முதலமைச்சரின் வருகை  ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில்,  முதலமைச்சரின் கள ஆய்வு இந்த மாதம் 27, 28ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் அதற்காக வரும்  27ம்தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் செல்கிறார். அன்றைய தினம் மாலை,  திண்டிவனத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் அன்று இரவு விழுப்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். பி

ன்னர் 28ம் தேதி காலை விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணை ஆற்றில் மறுகட்டுமானம் செய்யப்பட்ட அணைக்கட்டினை திறந்து வைக்கிறார். தொடர்ந்து வழுதரெட்டியில் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி திருவுருவச்சிலை, நினைவு அரங்கம் மற்றும் வன்னியர்கள் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கான நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பழனி தலைமையில்  அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், மக்கள் நல திட்டங்கள், பயனர்கள் தேர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆட்சி பழனி செய்தியாளர்களை சந்தித்த போது,   தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 27, 28ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடிவுற்ற திட்டபணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசுத்துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை, அரசு நலத்திட்ட உதவிகள் விவரம், முடிவுற்ற மற்றும் புதிய திட்டபணிகள் விவரம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் வருகை புரியும் வழித்தடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள், பயனாளிகள் தேர்வு பட்டியல் தயாரிப்பது குறித்தும், உயர் அலுவலர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்வது குறித்தும் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதில் எஸ்பி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யாஷூநிகம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) யோகஜோதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.