சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக நாளை ( 11, 12-ந்தேதி) திருப்பூர் கோவை பயணமாகிறார். அப்போது பல்வேறு மக்கள் நலதிட்டங்களை தொடங்கி வைப்பதுடன் ரோடு ஷோவும் மேற்கொள்கிறார்.

களஆய்வுக்காக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஜூலை 22, 23-ந்தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தார். இடையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரத கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் 10 நாட்கள் சிகிச்சை மற்றும் ஓய்வுபெற்ற நிலையில், மீண்டும் தனது களஆய்வு பயணத்தை மேற்கொள்கிறார்.
அதன்படி, வருகிற 11, 12-ந்தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார். அப்போது, அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.
சென்னையில் இருந்து கோவை சென்று அங்கிருந்து திருப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். பின்னர், மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.