சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார் .
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையின் 108 பக்தி நூல்களை வெளியிட்டு, புத்தக விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தொடர்ச்சியாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்களை மீட்டெடுத்தல், பழங்கால கோயில்களை கண்டறிந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடமுழுக்கு மேற்கொள்ளுதல், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 108 பழங்கால பக்தி நூல்கள் கண்டறியப்பட்டு அவை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்த 108 நூல்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். குறிப்பாக தேவாரம், அபிராமி அந்தாதி, அகத்தியர் திருநூல், கந்த புராண கதை, நாலாயிர திவ்ய பிரபந்தம், சைவமும் வைணவமும், இந்து மத விளக்கம், சங்ககால புலவர்கள், சிவபுரி புராணம், திருப்புகழ், அற்புதங்களும் மருத்துவமும், அருளல்லர்கள், அர்ச்சக பஞ்சகம், தமிழ் புலவர் வரிசை உள்பட 108 அறிய நூல்களை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் புத்தக விற்பனை நிலையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். கருணை அடிப்படையில் நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துறை சார்ந்த அதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.