சென்னை: பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்ற  சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமகன், மாரியப்பனுக்கு தமிழ்நாடுஅரசு சார்பில்,  ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

ஜப்பான் நாட்டில் கடந்த மே மாதம்  (2024) நடைபெற்ற  உலக பாரா ஒலிம்பிக்கில்  தமிழ்நாட்டைச்சேர்ந்த தங்கமகன்  மாரியப்பன் தங்கவேலு தங்கம் சென்று  சாதனை படைத்தார். இவர் ஏற்கனவே 2016ம் ஆண்டு நடைபெற்ற  பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், தற்போதைய (2024) பாரா ஒலிம்பிக்கிலும் 2வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்படபல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், தங்கமகன் மாரியபனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உயரிய ஊக்கத் தொகையாக 75 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.6.2024) தலைமைச் செயலகத்தில், ஜப்பான் நாட்டில் நடைபெற்ற 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 75 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”யை உருவாக்கியது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

https://x.com/i/status/1800425049159266583

கடந்த மே மாதம் 17 முதல் 25 வரை ஜப்பான் நாட்டின் கோபில் (KOBE) நடைபெற்ற 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டு வீரர் த.மாரியப்பனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை உயரிய ஊக்கத் தொகையாக வழங்கி வாழ்த்தினார்.

முன்னதாக, மாரியப்பனுக்கு 2019-ஆம் ஆண்டு ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாட்டின் துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 2020-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற் காக 2 கோடி ரூபாய்க்கான காசோலை, 2023-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற International Wheelchair and Amputee Sports Federation போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக 5 லட்சம் ரூபாய்க்கான் காசோலை உயரிய ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, பயிற்றுநர் சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.