சென்னை: தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு  செல்வதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க  ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஜெர்மனி புறப்பட்டார்.  இதையடுத்து இங்கிலாந்து செல்லும் முதல்வர் அங்குள்ள  பிரபலமான   Oxford பல்கலைக்கழகத்தில்  சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கில், தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், அதற்கு கூடுதலாக மெருகேற்றும் விதமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை இன்று (ஆக.30) தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்பயணத்தில் முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய நோக்கமாக இருப்பினும், அது தவிர்த்து சில கருத்தரங்குகளிலும் பங்கேற்க இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குறிப்பாக, செப்டம்பர் 4ஆம் நாள் இங்கிலாந்தின் Oxford பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கிற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கில், தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார். அவரது வெளிநாடு பயணம்  செப்.7 அன்று நிறைவடைந்து, செப்டம்பர் 8ஆம் நாள் தாயகமான தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 5வது முறையாக அரசு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று வெளிநாடு பயணம்  செல்வதையொட்டி,  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், U.A.E., ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், U.S.A. ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் அளித்த வெற்றியின் ஊக்கத்தோடு, அந்தப் பயணங்களால் பெறப்பட்ட முதலீடுகள் தரும் நம்பிக்கையோடு ஜெர்மனி & இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணமாகிறேன்…
இதுவும் Hit அடிக்கும்! நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு இந்தப் பயணங்கள் பாதை அமைக்கும்!
தமிழ்நாடு அரசு,  ரூ.10.64 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.  தமிழகத்தில் புதிதாக 32.81 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா கருத்துக்கணிப்புகளையும் விஞ்சி திமுக கூட்டணி அமோக வெற்றி பெறப் போகிறது.

எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப்பயணம் போன்று, எனது பயணம் அல்ல அவருடைய வெளிநாட்டுப் பயணங்கள் எப்படி இருந்ததோ, என்னுடைய வெளிநாட்டுப் பயணங்களும் அப்படியே இருக்கும் என்று நினைத்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

திமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

பல்வேறு நிறுவனங்களுடன் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகம் வளர்ந்துள்ளதா என கேட்பவர்களுக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதிலாக உள்ளது.  திமுகவை நோக்கி புதிய கட்சிகள் வருகின்றனவோ இல்லையோ. புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும், அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு என்றார்.

இவ்வாறு கூறினார்.