சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . தொடர்ந்து, 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்தையும் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி வீடு கட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் உடனடியாகப் பெறும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, தமிழகத்தில் முதன்முறையாக ஆன்லைனில் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். www.onlineppa.tn.gov.in என்ற இணைய தளத்தில் மனு தாக்கல் செய்து, அனுமதியை பெறலாம் என்றும், இது 2,500 சதுர அடி வரை உள்ள மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு திட்டம் பொருந்தும்என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிர்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆன்லைன் மூலம் கட்டட அனுமதியை உடனே வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கப்படவுள்ளது. www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டட அனுமதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.07.2024) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணைய தளம் வாயிலாகச் சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாகக் ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2,500 சதுர அடி வரையுள்ள மனையிடத்தில், 3,500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும். சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் கடைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.
தற்போது, குடியிருப்புக் கட்டடங்களுக்கான கட்டட அனுமதி பெறுவதற்காகப் பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில் 72 விழுக்காடு ஊராட்சிகளிடமிருந்தும், 77 விழுக்காடு பேரூராட்சிகளிடமிருந்தும், 79 விழுக்காடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடமிருந்தும் பெறப்படுகிறது. அவ்விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டடங்களுக்கும் சாலைக்கும் இடையில், தளர்வு (1.5 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது), கூராய்வுக்கட்டணம் (scrutiny fee) (சதுர மீட்டருக்கு ரூ.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (I & A) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களைச் செலுத்தியபின் விரைவுத் துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாகக் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விபரங்கள் அடிப்படையில் உடனடி அனுமதி அளிக்கப்படும். என்றவர், இந்த அனுமதி தொடர்பான ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4184 குடியிருப்புகள் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.