சென்னை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார்.

தமிழ்நாட்டில்,தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் உலகபுகழ்பெற்றது மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியாகும். இதை காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர்.
இநத் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்ளதாக அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.
தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ஆம் நாள் அதாவது, தை மாதம் 3-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 6,500 காளைகள் இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. தகுதிச் சோதனைகளுக்குப் பிறகு, மிகவும் வலிமையான 1,100 காளைகளுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றை எதிர்கொள்ள 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக, நட்சத்திர மாடுபிடி வீரர் அபி சித்தர் இப்போட்டியில் பங்கேற்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி பெறும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதலிடம்: அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் வழங்கப்படுகிறது.
சிறந்த காளை: பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக அளிக்கப்படுகிறது.
இரண்டாம் பரிசு: சிறந்த வீரர் மற்றும் காளை உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
ரொக்கப் பரிசு: இந்த ஆண்டு முதன்முறையாக முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு முறையே 3 லட்சம், 2 லட்சம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக தங்கம், வெள்ளி நாணயங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என ஒவ்வொரு சுற்றிலும் பரிசுகள் வாரி வழங்கப்படுகின்றன.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் மண்டல ஐ.ஜி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பாரம்பரிய நிகழ்வைக் காணச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]