சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னை பிராட்வே உள்பட பல பகுதிகளுக்கு சென்று, வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு, அதுதொடர்பான அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளையும் வழங்கி வருகிறார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாகவும், வழக்கத்தை விட நடப்பாண்டில் கூடுதலாக மலை பெய்ய வாப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ரூ.608 கோடி செலவில், 179 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 10ந்தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். பிராட்வே என்எஸ்சி போஸ் சாலையில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டார். மழை நீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகள் எந்த அளவு முடிந்திருக்கிறது என்பதை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.