சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தகப் பூங்காவைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த புத்தக பூங்காவில், 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த புத்தகப் பூங்காவை இன்று பயனர்கள் பயன்படுத்தும் வகையில், முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் 84 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பாடநூல் கழக நூல்கள் விற்பனைக்கான மின் வணிக இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், மேயர் பிரியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சென்னையில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. மெட்ரோ ரயில் மூலம் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல் தளத்தில் பொது நூலகத்துறை சார்பாக சுமார் ரூ.1.85 கோடி மதிப்பில் மெகா புத்தக பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று திறப்பு விழா காணப்பட்டுள்ளது.
இந்த புத்தக பூங்கா 5,000 சதுர அடியில் 70 புத்தக அலமாரிகள் உள்ளன. ஒரு சிறிய அரங்கம், வசதியான இருக்கைகளுடன் கூடிய மேசைகள் மற்றும் ஒரு சிற்றுண்டிச் சாலை ஆகியவை உள்ளன. இந்த பூங்காவில் 50-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்துகிறார்கள். இதன் மூலம், பயணிகளுக்குப் பல்வேறு வகையான புத்தகங்கள் கிடைக்கும். பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து எந்த புத்தகத்தையும் படிக்கலாம். மேலும், அவர்களுக்கு புத்தகம் பிடித்திருந்தால், அதை வாங்கிக்கொள்ளலாம். எல்லா புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
இந்த புத்தக பூங்காவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், ஆங்கிலம் மட்டுமின்றி மொழிபெயர்க்கப்பட்ட உலக மொழி புத்தகங்களும் இருக்கும். இந்த நூலகம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.