தூத்துக்குடி: இரண்டு நாள் பயணமாக தூத்தக்குடி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டம் உள்ளது. புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலம் சுமார் 75,000 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும்.
அரசு திட்டங்கள் தொடக்க விழா மற்றும் பயனர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் வகையிங்ல நேற்று (டிசம்பர் 29ந்ததி ) தூத்துக்குடி வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் மற்றும் மாவட்ட கலெக்டர் , அரசு அதிகாரிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்பட பலர் வரவேற்றனர். அதன்பின் முதல்வர் காரில் சத்யா ரெஸ்டாரண்ட் சென்று தங்கினார்.
இதைத்தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.32½ கோடி செலவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பின்னர், மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்.
இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறுவர்.
இந்த திட்டம் வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவிகளிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதாக அமைந்துள்ளது.
மதியம் நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பிரதான சாலைகளின் இருபுறமும் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் காமராஜ் கல்லூரியில் பிரமாண்ட பந்தல் மற்றும் கல்லூரி முன்பாக அலங்கார வளைவு, தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது.