சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, வரும் 12ந்தேதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் கூட்டாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தின்18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதனால் 18-வது மக்களவை அமைப்பதற்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை மார்ச் 16ந்தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற உள்ளது.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் முடிந்து அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இந்த முறையும் 39 தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள், பிரசார பீரங்கிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏப்.12ல் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி வரும் 12ந்தேதி கோவை தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலி,ன அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. உடன் இணைந்து வருகிற 12ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிப்பாளையம் எல்அன்டி பைபாஸ் ரோட்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.