சென்னை:

ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி செய்ததற்கு முதல்-வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் நடந்த மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ 2 முறை பேசினார்.அப்போது கவுன்சில் வளாகத்தில் சிங்களர்கள் வைகோவை சூழ்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து வைகோவுக்கு இரு பாதுகாப்பு அதிகாரிகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்பாடு செய்தது.

இந்தநிலையில் ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, சிங்களர்கள் சிலர் தாக்க முயற்சித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வைகோவை சிங்களர்கள் தாக்க முற்பட்ட செயல் கண்டனத்துக்குரியது.

வைகோ மீதான தாக்குதல் முயற்சி செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் வருங்காலத்தில் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகோவுக்கு பாதுகாப்பு தர உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.