சென்னை:
மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலய மாநில உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக, மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதி மன்ற நீதிபதியாக கடந்த ஆண்டு (2018) பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நிதிபதியாக, மும்பை உயர்நீதி மன்ற நீதிபதியான, வி.கே.தஹில் ரமணியை கொலிஜியம் பரிந்துரை செய்து நியமனம் செய்தது. இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் 3வது பெண் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
சுமார் ஓராண்டு காலம் மட்டுமே அவர் பணியாற்றிய நிலையில், அவரை மேகாலயா மாநிலத்துக்கு உச்சநீதி மன்ற கொலிஜியம் மாற்றம் செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மேகாலய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அவர் விரைவில் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.