டாக்கா:
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய வங்கதேச உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சிகிச்சைக்காக ஒரு மாத கால விடுப்பில் சென்ற அவர் மலேசியாவில் உள்ள வங்கதேச தூதரகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
வங்கதேச நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திரகுமார் சின்ஹா. இந்த பதவியில் இருந்த முதல் இந்து இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது உச்சத்துக்கு சென்றதால் ராஜினாமா முடிவை எடுக்க வேண்டிய நிலை சின்ஹாவுக்கு ஏற்பட்டுள்ளது.
தவறு செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தொடர்பாக வங்கதேச நாடாளுமன்றத்துக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றை சின்ஹா அதிரடியாக ரத்து செய்தார். இது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கும், நீதிபதி சின்ஹாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சிகிச்சை மேற்கொள்வதற்காக ஒரு மாத விடுப்பில் அவர் சென்றார்.
அதன் பிறகு சின்ஹா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் சக நீதிபதிகளே அவருடன் அமர்ந்து வழக்குகளை விசாரிக்க மாட்டோம் என அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில், மலேசியாவில் உள்ள வங்கதேசத் தூதரகத்தில் தனது ராஜிநாமா கடிதத்தை சின்ஹா அளித்துள்ளார். சின்ஹாவின் கடிதம் தங்களுக்கு கிடைத்துள்ளதாக வங்கதேச அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.