டெல்லி: இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ (robot) சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கப்போவதாக அறிவித்தபோது, பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூ னமூர்த்தி, தமது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று அறிவித்தார். அதே சமயத்தில் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து விலகி ரஜினியுடன் இணைந்தார் அர்ஜூன மூர்த்தி.
ஆனால் பிறகு ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தைக் கைவிட்ட நிலையில், தான் தனியாக கட்சி துவங்கப்போவதாக அறிவித்திருந்தார் அர்ஜூன மூர்த்தி. அதன்படி, அவர், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தார்.
தமது இமமுக ஆட்சிக்கு வந்தால் 4 துணை முதல்வர் பதவி கொண்டு வரப்படும். பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளுக்கு பஸ் பாஸ் உடன் இலவச பெட்ரோல் கார்டு தரப்படும் என்று கவர்ச்சிகரமாக அறிவித்தார். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அக்கட்சி சின்னம் கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
இந் நிலையில் அக்கட்சிக்கு ரோபோட் (robot) சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகளை அக்கட்சி தொடங்கும் என்று தெரிகிறது.