தேவர்களும் அசுரர்களும் கிடைப்பதற்கு அரிய பொருளான அமிர்தம் பெறவே பாற்கடலைக் கடைந்தனர். உலகத்தில் மகத்தானதும், மாட்சிமைப் பெற்ற பொருளானதும் அமிர்தமாகும். இது, கிடைத்தால் மரணமில்லை. ஞானம், புகழ், பெருமை, முக்தி பெறும் பேறு என எல்லாம் அடங்கிய அமிர்தமே லிங்கமாக மாறி அருள்தரும் திருத்தலம் தான், ”கலைசைச் சிதம்பரேஸ்வரர்” திருக்கோயிலாகும்.
வரலாற்றுப் பின்னணியும், தேவர்கள் வணங்கிய புராண பின்னணியும், திருவாவடுதுறை ஆதீனப்புலவர்கள் பாடிய பாடல் பெற்ற தலமாகவும் விளங்குவது கலைசைச் தலமாகும். இயற்கையில் பல அதிசயங்கள் நிகழும் தலமாகவும் இத்தலம் உள்ளது.
திருக்கோயில் அமைவிடம்:
ஆவடி- திருவள்ளூர் பேருந்து வழித்தடத்தில் ”செவ்வாய்பேட்டை” எனும் ஊருக்கு அருகாமையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இரயில் மார்க்கத்தில், இதே வழித்தடத்தில் ”செவ்வாய் பேட்டை” நிறுத்தத்திலிருந்து ஆட்டோவில் செல்லலாம்.
தலத்தின் பெயர் ;
இவ்வூர், புராண வரலாற்றின்படியும், புலவர்களின் பாடல்களின் படியும் ”கலைசை” என்று அழைக்கப்பட்டாலும், ”தொட்டிக்கலை” என்று தற்பொழுது வழங்கப்படுகிறது. மற்றும் ”கலைசாபுரி” ,”கோவிந்த புரம்”, ”வடதில்லை” எனப் பல்வேறு இலக்கியங்களில் பல பெயர்களால் இவ்வூர் அழைக்கப்படுகின்றது. பசும் தொழுவத்தில் உள்ள கழுநீர் தொட்டி அதிகம் இருந்ததால் தொட்டிக்கலை என்று பெரும்பகுதி மக்கள் இன்றழைக்கின்றனர்.
தலபுராணச் சிறப்பு:
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்த போது, தன்வந்திரிப் பகவான் அமுதக் கலசத்துடன் வந்தார். விநாயகரை வணங்காமல் அமுதம் கடைந்ததால் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணிய விநாயகப்பெருமான் அமுதக்கலசத்தை மறைத்து வைத்தார். தங்களது தவற்றை உணர்ந்த தேவர்களான பிரம்மனும், இந்திரனும் தங்களை மன்னிக்க விநாயகரிடம் வேண்டினர். மன்னிக்கும் அதிகாரம் ஈசனுக்கே என விநாயகர் சொல்லியதால், இந்திரன், பிரமன் ஆகியோர் ஈசனை நோக்கி தவம் இருந்து ஈசனிடம் இருந்து அமிர்தத்தைப் பெற்றனர், அப்போது அமிர்த குடம் தளும்பச் சிந்திய சிறு துளி அமிர்தம் இத்தலத்தில், லிங்கமாக மாறியது. எனவே, அமிர்தத்தின் உருவமாகவே லிங்கம் இருப்பதனால் கடவுளுக்குக் ”கலைசைத் தியாகேசர்” எனப் பெயர் பெற்றார். லிங்கம் அமிர்தத்தால் உண்டானது என்பது எவ்வளவு மகத்துவமானதும் சிறப்பானதும் ஆகும். இத்தலத்தின் இறைவன் அமிர்த வடிவமாகக் காட்சி தருகின்றான். காண்போர், அருள் வேண்டு வோர் அத்தனைப் பேருக்கும் அமிர்தத்தின் பயனைத் தன் அருளினால் வழங்குகிறார். இப்புராணக் கதையைக்,
‘கும்பங் கொடுத்த கலைசைத் தியாகர் குளக்கணுஞ்சீ
தம்பம் பிடவசை யுங்குளிர் வாடை தணந்தவர்க்குக்” (கலைசைக் கோவை-451)
‘எம்பாவை யேற்குங் கலைசைத் தியாக ரெடுத்து முன்னாள்
தம்பாலிருந்த கலசத்தை வேதன் றனக்குணர்ந்துன்” (கலைசைக் கோவை-65)
என்று கலைசைக் கோவை கூறும்
திருக்கோயில் அமைப்பு:
தொட்டிகலை ஊரின் மையப் பகுதியில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது இக்கோயில். இரண்டு . மிகப் பெரிய பிரகாரங்களை உடையதாகும். கோயில் முன் புறமாக வடக்குப் புறத்தில் ”சிவகங்கைத் தீர்த்தம்” என்று வழங்கப்படும் அற்புதமான குளம் அமைந்திருக்கின்றது. சிவகங்கைத்தீர்த்தம் புராணக் கதையோடு தொடர்புடையது.இந்தத்தீர்த்தம் பல நோய்களைத் தீர்க்கும் வல்லமை உடைய அரு மருந்தாகக் காணப்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்ற பொருளில் சிவனின் கங்கைத்தீர்த்தம் என வழங்கப்படுகிறது.
இராஜகோபுரம் பெரியதான நுழைவாயிலைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. கோபுரத்தின் மேல்பகுதி இல்லை. அடித்தளம் இராஜ கோபுரத்தைத் தாங்கி நிற்கக்கூடிய நிலையில் கட்டப்பட்டு உள்ளது நுழைவாயிலைக் கடந்ததும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய செப்புத்தகடு போர்த்திய கொடிமரம்,பலிபீடம், நந்திதேவர் மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. மகாb மண்டபத்தில் நேரெதிரே கருவறையில் அற்புதமான தாமரைப் பீடத்தில் வட்ட வடிவ ஆவுடையார் மூலஸ்தானமாக அமிர்த வடிவாகச் ”சிதம்பரேஸ்வரர்” எனும் திருநாமத்துடன் மூலவர் காணப்படுகிறார். வாயிற்காப்போன் மிகப் பழமையான வடிவுடன் காணப்படுகின்றனர்.
கருவறைத் தேவ கோட்டங்களாகக் கணபதி, தஷ்ணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, விஷ்ணு ஆகியோர் உள்ளனர். சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகள் இங்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. விதானங்கள் வண்ணங்களுடன் சுதைச்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மூலஸ்தானத்திற்கு வலதுபுறம், நால்வர் சிலைகள் வரிசையாக உள்ளன. அவரோடு, திருவாவடுதுறை ஆதீனப் புலவர் சிவஞான முனிவர் சிலையும் அங்கு உள்ளன. சிவஞான முனிவர் சிலையை மாதவ சுப்பிரமணிய முனிவர் இங்கு வைத்து வணங்கியதாக, அவர்தம் பாடல்கள் வழி அறிகின்றோம். இருவரும் குரு, மாணவர்களாக இவ்வூரில் தங்கி இவ்வூர் திருத்தலத்தையும், அருகாமையில் இருக்கக் கூடிய பல கோயில்களையும் பாடி இலக்கியம் செய்தவர்கள். இவர்கள் இருவரும் அளப்பரிய அதிசயங்கள் எல்லாம் இக்கோயிலிலி ருந்து நிகழ்த்தியவர்கள் ஆவர்.
நுழைவாயிலின் உட்புறம் சூரியன், சந்திரன் சிலைகள் உள்ளன. உட்புறப் பிரகாரத்தில் தனித்தனி சன்னதிகளாக ஸ்ரீ விநாயகர் சன்னிதி, வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முருகப் பெருமான் சன்னதி, மகாலட்சுமி சன்னதி, ஸ்ரீ தியாகராஜர் சன்னதி, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி, ஸ்ரீ விசுவநாதர் விசாலாட்சி சன்னதி, சோமாஸ் கந்தர் சன்னதி ஆகிய சன்னதிகள் காணப்படுகின்றன. சுவாமி சன்னதிக்கு இடதுபுறம் தெற்குப் பார்த்த வண்ணமாகக் கருவறை அர்த்த மண்டபத்துடன் தனி சன்னதியாகச் சிவகாமி அம்பிகை உள்ளார். நடராஜர் சன்னதி இச்சன்னதிக்கு அருகாமையில் உள்ளது.
வெளிச்சுற்றுப் பிரகாரத்தில், இடதுபுறமாக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் அமைந்துள்ள வசந்த மண்டபம் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் தான் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். கார்த்திகைத் திருநாள், திருவிளக்குப் பூஜை, பெருநாள் போன்ற திருநாட்களில் இங்குதான் உற்சவமூர்த்தி இருந்து புறப்படுவார்.
வெளிப்பிரகாரத்தில் இடதுபுறமாக மடப்பள்ளியும், நாகர் சன்னதியும் உள்ளன. பல நூறாண்டு பழமை வாய்ந்த வில்வ மரம் இருந்தது. அதுவே கோயிலின் தல விருட்சம் ஆகும். அந்தப் பழைய வில்வமரம் தற்பொழுது இல்லாமல் புதியதான வில்வமரம் காணப்படுகிறது…
கோயிலின் வெளிப்புறத்தில் மாதவ சுப்பிரமணிய முனிவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ”சாமி மடம்” உள்ளது. அங்கு தற்போது தேவாரம் திருவாசகம் படித்தல் முற்றோதல் வகுப்புகள் நடைபெறுகின்றன. சிவஞான முனிவரும் மாதவசுப்பிரமணிய முனிவரும் இங்கு இருந்து பல பக்தி இலக்கியங்களை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்த்தச் சிறப்பு:
கோயிலில் சிவகங்கைத் தீர்த்தம் காணப்படுகிறது. இது கோவில் திருக்குளம் ஆகும். கங்கை நதியில் குளித்த பெருமை இக்குளத்திற்கு உண்டு. மேலும், பல நோய்களைத் தீர்க்கும் வல்லமை உடையது எனச் சுப்பிரமணிய முனிவர் தமது பாடலில் பாடியுள்ளார். மேலும், ”நந்தி ஓடை” எனும் தீர்த்தம் ஒன்று உள்ளது. தீர்த்தமானது, கோவிலின் பின்புறத்தில் உள்ளது. அது ஒரு ஓடை. தானே உற்பத்தியாகி ஊற்றிலிருந்து வரும் ஓடை நீர் ஆகும். பல அதிசயங்கள் நிகழ்த்தும் மருத்துவ குணங்களுடைய தீர்த்தம் அதுவாகும்.
இத்திருத்தலத்தில், மாதவ சுப்பிரமணிய முனிவரால் பாடப்பெற்ற பாடல்பெற்ற ஸ்தலமாக உள்ள ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் உள்ளது. சிவன் கோயிலின் பின்புறத்தில் இக்கோயில் உள்ளது. மிகப் பழமையான பெருமாள் கோவில் இதுவாகும். பசுப் பால் சொரிந்து வெளிப்பட்ட இறைவன் சுயம்புவாகக் கிடைத்த பெருமான் எனத் தல புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் சிற்பங்கள் மிக அருமையான வேலைப்பாடுகள் உடையதாகும். ஆதிகேசவபெருமாள், பெருந்தேவி தாயார் சன்னதிகள் உள்ளன. இதற்கு அருகாமையில் தனிக் கோயிலாகச் செங்கழுநீர் விநாயகர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் குறித்தும் பக்தி இலக்கியங்கள் பாடப் பெற்றுள்ளன. விநாயகரின் திருவாவடுதுறை ஆதீனப்புலவர் சிவஞான முனிவர் இலக்கியம் புனைந்துள்ளார்.
திருவிழாச் சிறப்பு:
சிவன் கோயில்களில், ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்கள் இங்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறன. பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி, திருவாதிரை, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், நவராத்திரி, சஷ்டி நாள், அவதாரத் திருநாள், சபாபதி அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் மிகச் சிறப்புடன் ஊர்மக்களின் தயவுடன் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தினர் நடத்துகின்றனர். இவ்விழாக்களில் மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ விழா மற்றும் ஆருத்ரா விழா போன்றவை மற்ற இ
டங்களை விடச் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. திருவிளக்குப் பூஜையும் தொடர்ந்து சிறப்பான நாட்களில் நாட்டுநலன் கருதி அடிக்கடி இங்குக் கொண்டாடப்படும். திருவாவடுதுறை ஆதீன புலவர் சிவஞானமுனிவர் ”கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி”, ”கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்” என்ற இரண்டு நூல்களை ப் படைத்துள்ளார்.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ”சிதம்பரேஸ்வரர் மாலை” என்னும் நூலைத் படைத்துள்ளார். தொட்டிகலை மாதவ சுப்பிரமணிய முனிவர் கிட்டத்தட்ட இக்கோயில் குறித்து ஒன்பது சிற்றிலக்கியமான பக்தி இலக்கியங்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார். வண்ணம், பரணி, கட்டியம், சிலேடை வெண்பா, இரட்டைமணிமாலை, திருத்தம், வண்ணம் என்ற வகைகளில் பல இலக்கியங்களைப் பாடியுள்ளார்.
கட்டுரையாளர் : பாரதிசந்திரன் (முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)
திருநின்றவூர். 9283275782. chandrakavin@gmail.com,