டில்லி

என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் சிபிஐ காவலில் செப்டம்பர் 2 வரை இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் பெற விதிகளை மீறி சலுகை அளித்ததாக முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முடிவு செய்தன.   சிபிஐ தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சிதம்பரம் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.   அந்த மனுவை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதையொட்டி கடந்த 21 ஆம் தேதி அன்று சிபிஐ கைது செய்து அவரை விசாரித்து வருகிறது.   நீதிமன்றம் அவருக்கு விசாரணைக்கு அளித்த காலக் கெடு நாளையுடன் முடிவடைகிறது.  எனவே அவர் தன்னை ஜாமீனில் விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.  ப சிதம்பரம் சார்பில் இந்தியாவின் மிகப் பெரிய வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அமலாக்கத்துறை சிதம்பரத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றத் தடை உள்ளது.  சிபிஐ காவல் நாளையுடன் முடிவடைவதால் இந்த வழக்கு இன்று உச்சந்நிதிமன்ற நீதிபதிகள் பானுமதி மற்றும் பூபண்ணா ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.   இந்த அமர்வு சிதம்பரம் வரும் 2 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.