சென்னை; சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த மாத இறுதிக்குள் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறநிலையத்துறை அமைச்சர் கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் கோயில்களை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு என்பதை சுட்டிக்கட்டியவர், தற்போது இங்குள்ள சித்திபுத்தி விநாயகர் கோயிலும், பெரியபாளையத்து அம்மன் கோயிலிலும், திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர், தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வான பட்டினப்பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை பயத்தின் அடிப்படையில் நீக்கப்படவில்லை என்றவர், , ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது என்றார். எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகள் அப்போதைய சுழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றும் கூறனிர். தமிழகஅரசு ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தவர், திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அங்குள்ளவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். அங்கு அரசு, அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளதை, பதிவு செய்துள்ளோம் என்றும், சட்டபூர்வமாக அவர்கள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.