தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்டது. பிரச்சாரம் முடிய இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் அன்ன ஆகாரம் இன்றி, அனல் வெய்யிலில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இதற்கு காங்கிரஸ் கட்சியும் விதிவிலக்கல்ல. அக் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிர் அணியினரான கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ் போன்றோரும் சில இடங்களி்ல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஆனால், தமிழக காங்கிரஸில் முக்கிய பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் ஒதுங்கியே இருக்கிறார். தனது சொந்த மாவட்டமான சிவங்கையில் ஓரிரு முறை பிரச்சாரம் செய்ததோடு சரி.
ஏன் இப்படி தனித்திருக்கிறார் ப.சி.?
கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ டில்லி அளவில் அரசியல் செய்தே பழக்கப்பட்டவர் சிதம்பரம். இங்கே மாநில தலைமைக்கு கட்டுப்படுவது அவருக்கு சிரமமாக இருக்கிறது” என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், “கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தொகுதிப்பங்கீட்டு விசயத்தில் ப.சிதம்பரத்தின் கை ஓங்கி இருந்தது. ஆனால் இந்த முறை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்தான் ஆல் இன் ஆல்.
தி.மு.கவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தை நடந்த சமயத்திலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ப.சிதம்பரம். ‘மாநிலத் தலைவர் இளங்கோவன் தலைமையின் கீழ் என்னால் பணியாற்ற முடியாது. குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே போன்ற அகில இந்திய தலைவர்களை, தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச நியமியுங்கள்” என்று சோனியாவிடம் கூறினார் ப.சிதம்பரம்.
ஆனால் இதற்கு ராகுல் ஒப்புக்கொள்ளவில்லை. “ஆளாளுக்கு நாட்டாண்மை செய்வது இனி கூடாது. மாநில தலைவர்தான் அதிகாரம் பொருந்தியவர். அவருக்கு மற்றவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறிவிட்டார்.
இதனால் ப.சி. சோர்ந்துபோனார். அவரது மகன் கார்த்தி, தனது ஆதரவாளர்களுடன் ரகசிய கூட்டங்கள் நடத்தினார். இந்த நிலையில், தனது ஆதரவாளர்களில் மிக முக்கியமானவர்கள் என்று ஆறு பேரை குறிப்பிட்டு அவர்களுக்கு கட்டாயம் சீட் தர வேண்டும் என்று இளங்கோவனிடம் தெரிவித்தார் ப.சி.
ஆனால், ப.சி. ஆதரவாளர்களில் கராத்தே தியாகராஜன், காரைக்குடி கே.ஆர்.ராமசாமி என மிகச் சிலருக்கு மட்டுமே சீட் ஒதுக்கினார் இளங்கோவன்.
இதனால் அதிருப்தி அடைந்த ப.சி., பிரச்சாரத்துக்குச் செல்லவில்லை. இதற்கிடையே அவரை ஆத்திரப்படுத்தும் இன்னொரு சம்பவம் நடந்தது. காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டபோது, குஷ்புவுக்கு அடுத்த இடத்தில் சிதம்பரம் பெயர் இருந்தது.
இதையும் புகாராக டில்லி தலைமையிடம் கொண்டு போனார் சிதம்பரம். ஆனால் அதற்கும் அங்கே ரெஸ்பான்ஸ் இல்லை. ஆகவே வருத்தத்தில் ஒதுங்கி இருக்கிறார் அவர்” என்கிறார்கள்.
சிதம்பரம் ஆதரவாளர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள்.
” சிதம்பரம் துடிப்பாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்புகூட சிவகங்கை பகுதியில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தார்” என்றவர்கள், ப.சி., டில்லியில் அடிக்கடி முகாமிடுவதற்கான காரணத்தையும் கூறினார்கள்:
“ டில்லியில் இஸ்ரத் ஜகான் என்கவுண்ட்டர் வழக்கில் சிதம்பரம் பெயரை இணைத்து மத்திய பா.ஜ.க அரசு தகவல் பரப்புகிறது. ‘இதை நீங்களே எதிர்கொண்டு முறியடியுங்கள்” என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார். இதனாலேயே ப.சி, டில்லியில் முகாமிட்டுள்ளார்” என்கிறார்கள்.
நாளை தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சென்னை தீவுத்திடலில் தி.மு.க – காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேச இருக்கிறார்.
ஆனால், இந்த சோனியா கூட்டத்துக்காவது ப.சிதம்பரம் வருவாரா என்ற பேச்சும் இப்போது காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.