சென்னை :
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை தரமுடியாத மத்திய அரசு மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க இரண்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளது, 27-ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த ஆலோசனையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கியிருந்தார்.
நிர்மலா சீதாராமன் வழங்கிய இந்த இரண்டு ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க முடியாததற்கு கொரோனா வைரஸ் எனும் ‘கடவுளின் செயல்’ தான் காரணம் என்றும் நடப்பு நிதியாண்டில் மந்த நிலையே நிலவும் என்று கூறியிருந்த நிர்மலா சீதாராமனுக்கு “கடவுளின் தூதராக விளங்கும் நமது நிதி அமைச்சர் கொரோனா வைரசுக்கு முன் பொருளாதார நிலை எப்படி இருந்தது என்று கூறமுடியுமா?” என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
“தொற்றுநோய் ‘கடவுளின் செயல் ’என்றால், தொற்றுநோய் இந்தியாவைத் தாக்கும் முன் 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலங்களில் தங்களின் தவறான பொருளாதார நிர்வாகத்தை நீங்கள் எப்படி அழைப்பீர்கள் ? ”
“கடவுளின் தூதராக நிதி அமைச்சர் தயவுசெய்து பதிலளிப்பாரா?” என்று முன்னாள் நிதி அமைச்சர் கேள்வியுழுப்பியுள்ளார்.
மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளதால் தங்கள் வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்கள் கடன் வாங்கிக்கொள்ள இரண்டு வாய்ப்புகளை மோடி அரசு வழங்கியுள்ளது.
“முதல் அறிவுறுத்தலின் படி, மாநிலங்கள் தங்களுக்கு வரவேண்டிய இழப்பீட்டுத் தொகைக்கு ஈடாக தங்கள் மாநிலத்தின் எதிர்கால வரவுகளை அடகு வைத்து கடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, ”
“இரண்டாவது வாய்ப்பின் படி, மாநிலங்கள் மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கும் வெளிச்சந்தையில் கடன் வாங்குவதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது”
“இந்த இரண்டு ஆலோசனைகள் மூலம் நிதிச் சுமை முழுவதும் மாநிலத்தின் மீது தான் விழுகிறது, ஆகையால் இந்த இரண்டு வாய்ப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நிதி நிர்வாகத்தில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ளும் மத்திய அரசின் இந்த போக்கு சட்டத்தை மீறும் செயல்மட்டுமன்றி மாநிலங்களுக்கு இழைக்கும் துரோகம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.