ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு வருடத்திற்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பூபேஷ் பகேல் அறிவித்துள்ளார்.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் காலம் முடிவடைய உள்ள நிலையில், அகில இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்து உள்ளது. அதன்படி, அங்கு இருகட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பவர் 7-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நவம். 17-ஆம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் நேற்று (12ந்தேதி) சத்தீஸ்கர் கிரஹ லட்சுமி யோஜனா என்ற திட்டத்தை அறிவித்தார். இதன்கீழ் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு 15,000 வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “சத்தீஸ்கர் மாநிலத்தின் மகளிர் சக்திக்காக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘சத்தீஸ்கர் கிரஹ லட்சுமி திட்டத்தை தொடங்குவோம். இத்திட்டத்தின்கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நவம்பர் 5-ஆம் தேதி, முதல்வர் பூபேஷ் பகேல், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் பெண்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் அடங்கிய காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கினோம். அனைவருக்கும் மின்கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது” என்று கூறினார்.