சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது.

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று தொடங்கி பிரதமர் மோடி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன. இது பெரிய சாதனையாகும்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 19 சுற்றுகளை கொண்டது. சுவிஸ் முறையில் ஆட்டங்கள் நடைபெறும். போட்டிகள் தினசரி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி ஓய்வு தினமாகும். தொடக்க விழாவுக்கு முன்பு மாலை 5 மணிக்கு நடுவர்கள் கூட்டம் நடைபெறும். இதே போல முதலாவது ஆட்டம் நடைபெறுவதற்கு முன்பு 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு கேப்டன்கள் கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் மாற்று வீரராக இருப்பார். 4 பேர் தான் ஆடுவார்கள்.

வெற்றி பெற்ற அணிகள் வெற்றி பெற்ற அணியுடனும், தோல்வி அடைந்த அணிகள் தோல்வி அடைந்த அணியுடனும் விளையாடும். வெற்றிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். தோற்றால் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. 4 பேர் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒரு நகர்வுக்கு 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். 30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் அடிப்படையில் டிராவில் முடித்துக்கொள்ள முடியாது. சுற்றுகள் முடிவில் அதிக புள்ளிகளை எடுக்கும் அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். 2-வது, 3-வது இடங்களுக்கு முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்படும்.