அருள்மிகு சேரன் மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்
கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர், விசயநகரர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயில் திருமாலுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். அழகிய பெரிய திருமதிலும், திருச்சுற்று மாளிகையும் கொண்டுள்ளது. ஆற்றினை ஒட்டி அழகிய தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது.
இம்மண்டபம் இறைவனின் தீர்த்தவாரியின் போது தங்குமிடமாக இருக்கலாம். இக்கோயில் கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், மேற்பகுதி சுதையினாலும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக மண்டபத்திலும் மகாமண்டபத்திலும் உள்ள தூண்களில் பலவித புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
அவை பெரும்பாலும் வைணவ சமயத்தைச் சார்ந்தவையாக இருப்பினும் ஒன்றிரண்டு சிவபெருமானைக் குறித்தவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சுற்று மாளிகை தூண்களோடு அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை விமானத்தின் கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பாண்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கருவறை விமானம் விளங்குகிறது.
விமானம் எட்டுப்பட்டையுடன் கூடிய திராவிட பாணியில் அமைந்துள்ளது. மண்டபங்கள் விசயநகரர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இம்மண்டபங்களில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் பலவற்றை நோக்கும் போது அவை பல விசயநகரக் கோயில் மண்டபங்களில் காணப்படுவது போன்றே உள்ளன.