சென்னை:

மிழகத்தின் முதல் சர்க்குலர் ரயில் சேவை (சுற்றுவட்ட ரயில் சேவை) ஜனவரி இறுதியில் தொடங்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்து உள்ளதால், விரைவில் சேவை தொடங்கும் என நம்பப்படுகிறது.

இதன் காரணமாக நாட்டிலேயே மிகநீண்ட சுற்றுவட்ட ரயில் சேவையாக, சென்னை, செங்கல்பட்டு, அரக் கோணம், சென்னை ரயில்சேவை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சுற்றுவட்ட ரெயில் சேவை (சர்க்குலர் சர்வீஸ்)  என்பது, ரெயில் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் சுற்றி வரும் வகையிலான சேவை.  அதன்படி சென்னையில் தனது பயணத்தை தொடங்கும் ரயிலானது தாம்பரம் வழியாக செங்கல்பட்டு சென்று, பின்னர் அங்கிருந்து காட்பாடி செல்லும் ரெயில் பாதை வழியாக  அரக்கோணம் சென்று, மீண்டும் சென்னைக்கே வந்தடையும். இந்த ரெயில் சேவை விரைவில் தொடங்கும் என்று தென்னக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

1994ம் ஆண்டு முதல் சென்னை புறநகர் மக்களின்  கோரிக்கை வலுத்து வந்தது. அதைத்தொடர்ந்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அரக்கோணம் ராஜாளி கடற்படை தளம் இடையூறு உள்பட பல இடையூறுக ள் எழுந்தால் தடைபட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் பணிகள் விறுவிறுப்படைந்தது.    தற்போது அதற்கான பணிகள் நிறைவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தென் மண்டல ரயில்வேபாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரி 25-ம் தேதி இந்தப்பாதையில் ரயிலை இயக்கி ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து ரயில் நிலையங்கள் மற்றும் சிக்னல்களில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வந்தன. அதைத்தொடர்ந்து,  விரைவில் சுற்றுவட்டப்பாதை ரெயில் சேவை தொடங்கும் என கூறப்படுகிறது.