சென்னை:
எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று தன்னார்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு, இதுவரை ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யவில்லை, மேலும் அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
சென்னை மாநகராட்சியில் கடந்த 40 நாட்களாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர், ஆனால் கடந்த நாற்பது நாளாக அவர்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்ற தகவல் திடுக்கிட வைத்துள்ளது.
இவ்வாறு வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் இந்த தன்னார்வ ஊழியர்களுக்கு, அவ்வப்போது பரிசோதனை, முக்காப்பு மருந்து மற்றும் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 92 தன்னார்வலர்களில் ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் புதன்கிழமை இரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவர் பணியில் இருந்தபோதே நோய்த்தொற்று பரவியுள்ளதாக கருதப்படுகின்றது.
அவருக்கு தொற்று உறுதியான போது நாங்கள் மாநகராட்சிக்கு தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை என்று அந்தத் தன்னார்வ ஊழியர்களில் ஒருவர் தெரிவித்தார்.
இந்த தன்னார்வ ஊழியர்கள் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு பாதிக்கப்பட்ட பல குடும்பங்களையும் நேரடியாக சந்தித்து கணக்கெடுக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுடைய இரத்த மாதிரிகளை நாங்கள் எடுத்து வரவேண்டியுள்ளது. அவர்களுக்கும் தொற்று இருந்தால் அது எங்களையும் பாதிக்கும் என்று யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் மேலும் அவர்கள் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பும் தரவில்லை.
அதுமட்டுமல்லாமல் தன்னார்வ ஊழியர்கள் அனைவரும் காலை 7:30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்துவிட்டு தான் பணிக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றனர். இங்கு அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதால் மேலும் தொற்று பரவும் வாய்ப்புள்ளது என்று யாருக்கும் புரியவில்லை என்று மற்றொரு தன்னார்வலர் கூறியுள்ளார்.
மேலும் அவர், ஒரு நாளைக்கு அங்கு 50 முதல் 60 பேர் கூடுகின்றனர் சில நாட்களில் 120 பெயர் கூடும் வாய்ப்பும் உள்ளது, அவ்வாறு பல பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பின்னர் ஒரே இடத்தில் கூடும் போது அங்கு தொற்று பரவ அதிகம் வாய்ப்பிருக்கிறது. வருகையை பதிவு செய்வதற்க்காகவே இவ்வாறு அவர்கள் எங்களை ஒன்று கூடுமாறு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தன்னார்வ ஊழியர்களுக்கு கொடுக்கும் கபசுரக் குடிநீர், ஃஜிங்க் மாத்திரைகள், மல்டி விட்டமின் மாத்திரைகள் எதுவும் இதுவரை எங்களுக்கு ஒரு முறை கூட தந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்களுக்கு வேண்டியதெல்லாம் தினமும் காலை தன்னார்வலர்கள் மகிழ்ச்சியுடன் வேலைக்கு வரவேண்டும் என்பதே. ஆனால் இங்கு அதற்கான எந்த வசதியும் செய்து தரவில்லை, மேலும் எங்களுடைய கருத்தை கேட்கவும் இங்கு எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை. கடந்த 100 நாட்களில் இதுவரை எங்களுக்கு ஒருமுறை கூட பரிசோதனை செய்யப்படவில்லை. அறிகுறி இருந்தால் மட்டுமே நாங்களாக சென்று பரிசோதிக்க வேண்டியுள்ளது, இவ்வாறு பரிசோதித்த ஒருவருக்குத்தான் தற்போது தொற்று உறுதியாகியுள்ளது.இதுபோல் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்தால் நாங்கள் எப்படி வேலை பார்ப்பது என்று அவர் கேட்டுள்ளார்.