சென்னை: சென்னையின் 381 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தற்போதைய சென்னை மாநகரம், தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து கிழக்கு இந்தியக் கம்பெனியால் வாங்கப்பட்டு, உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நாளை நினைவு கூறும் வகையில், ண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம். கொண்டாடப்படுகிறது.
சென்னையின் மிக முக்கியமான பெருமை, விரிந்து பரந்த வங்காள விரிகுடாக் கடலும், எல்ஐசி கட்டிடமும் ஒரு காலத்தில் முக்கிய ஆதாரமாக திகழ்ந்தன. அத்துடன் பழமையின் சின்னங்களான செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம், மெட்ராஸ் போர் கல்லறை, அரசு அருங்காட்சியகம், சாந்தோம் தேவாலயம் போன்றவை சென்னை நகரத்துக்கு எடுத்துக் காட்டாக திகழ்கின்றன. அதுட்டுமின்றி ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையாக கருதப்படும் மெரீனா கடற்கரை உலக நாட்டு மக்களை ஈர்த்து வருகிறது.
இன்று மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும் சென்னை, வந்தாரை வாழ வைக்கும் நகரமாக மாறி உள்ளது. பலருக்கும் தொழில், வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. எல்லாச் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை நகரம், இன்று 381 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை! என பதிவிட்டுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆசியாவின் டெட்ராய்ட், மருத்துவ தலைநகர், தொன்மையான மாநகராட்சி என பற்பல பாரம்பரிய பெருமைகள் கொண்ட சென்னையின் 381வது பிறந்த தினம் இன்று!
வந்தாரை வாழவைக்கும் நகரமும் பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை எத்தனை எத்தனை இடர்வரினும் மீண்டு எழும்! மறுமலர்ச்சி பெறும் என பதிவிட்டுள்ளார்.