ஹெல்சின்கி, ஃபின்லாந்து
சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த இளஞர் ஃபின்லாந்தில் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என தூதரகம் அறிவித்துள்ளது.
சென்னையில் ஜார்ஜ் டவுனை சேர்ந்த 26 வயது எஞ்ஜினீயர் ஹரிசுதன். இவர் ஃபின்லாந்தில் டி சி எஸ் நிறுவனத்தில் 2016ஆம் வருடம் ஃபிப்ரவரியில் இருந்து பணி புரிந்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.
ஹரிசுதன் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மாலை 4.30 க்கு (ஃபின்லாந்தில் அப்போது மாலை 7) தனது தாயுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். தான் வார விடுமுறைக்கு நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறி உள்ளார். ஆனால் திங்கட்கிழமை அவர் தன் இருப்பிடத்துக்கு திரும்பி வரவில்லை.
ஹரியிடமிருந்து எந்த தகவலும் வராததால் கலக்கம் அடைந்த அவருடைய குடும்பத்தினர் அவரது அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அங்கும் அவர் வரவில்லை என தெரிந்ததும் மேலும் கலக்கம் அடைந்து, இந்திய தூதரகத்துக்கு புகார் அளித்துள்ளனர். ஃபின்லாந்தில் உள்ள தூதரகத்தால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஃபின்லாந்து அரசின் உதவியுடன் அவரது தொலைபேசியை டிரேஸ் செய்ய முயன்று வருகின்றனர்.
டிசிஎஸ் நிறுவனம் ஹரியின் உறவினர்கள் இருவரை ஃபின்லாந்துக்கு அனுப்பி அங்குள்ள போலீசுடன் சேர்ந்து அவரை தேட முடிவு செய்துள்ளது. ஹரியின் சகோதரர் தேஜ் தனது சகோதரரை தேடிக் கண்டுபிடிக்க டி சி எஸ் நிறுவனமும், இந்திய தூதரகமும் நல்ல ஒத்துழைப்பு தருவதாக கூறினார்.
ஹரியின் குடும்பத்தினர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு டிவிட்டர் மூலம் புகார் அளித்துள்ளார். அத்துடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் தனியாக ஒரு புகார் அளித்துள்ளனர். அதற்கான அக்னாலெட்ஜ்மெண்ட் வந்துள்ளது.
ஃபின்லாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், “நாங்கள் போலீசார் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஹரிசுதனை தேடி வருகிறோம். மக்கள் யாருக்காவது அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களை +358443414350 என்ற தொலைபேசிக்கோ அல்லது hov.Helsinki@mea.gov.in என்னும் ஈ மெயில் முகவரிக்கோ தொடர்பு கொள்ளவும் என டிவிட்டரில் அறிவித்துள்ளது.