சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
அதனையடுத்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு மாலை நேரத்தில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகப்பட்ச வெப்பநிலை 36 டிகிரி, குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோவையில் உள்ள சின்னக் கல்லாரில் 19 செ.மீ. மழையும், சின்கோனா 14செ.மீ, வால்பாறை 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை, திருவாரூரில் உள்ள குடவாசல் ஆகிய இரு பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.