சென்னை:
சென்னையில் குடிதண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் போர் போடும், போர்வெல் நிறுவனங்களின் கட்டணமும், விண்ணைத்தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குறிப்பாக சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் காய்ந்துபோன நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து உள்ளது.
சாதாரணமாக சென்னையில் 50, 60 அடிகளில் இருந்த நீர் மட்டம் தற்போது நூறு அடிகளை தாண்டி கீழிறங்கி உள்ளது. சில பகுதிகளில் 200 அடிகளுக்கு கீழே நிலத்தடி நீர் மட்டம் போய் விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, தண்ணீருக்காக பல வீடுகளில் போர் போட்டு வருகின்றனர்.
ஆனால், இந்த போர் போடுவதற்கான கட்டணமோ, விர்ரென தங்கம் போல உயர்ந்து வருகிறது. சாதாரணமாக அடிக்கு ரூ.75 முதல் 150 வரையே இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களில், போர்வெல் நிறுவனங்கள் தங்களது கட்டண விகிதங்களை அதிரடியாக உயர்த்தி உள்ளன. குறைந்த பட்சம் அடி ஒன்றுக்கு 250 ரூபாய் முதல் ரூ.400 வரை வசூலிக்க தொடங்கி உள்ளனர்.
இதனால் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரத்துக்கு போடப்பட்ட போர்வெல் தற்போது ரூ.40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவாகிறது. மேலும், 150 அடிக்கு மேலும் ஆழமாக போர் போட்டால், அதற்கான கட்டணம் மேலும் அதிகம். தற்போது சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ள நிலையில், ஒருவர் சராசரியாக 150 அடி ஆழம் வரை போர் போட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு பிடிக்கிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள போர்வெல் நிறுவனங்கள் அனைத்தும், பேசி வைத்துக்கொண்டு ஒரே அளவிலான கட்டண விகிதங்களை கூறி மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது மனித ஆற்றல் பற்றாக் குறை என்று தெரிவிக்கின்றனர். இந்த தொழிலுக்கு தேவையான நபர்கள் கிடைப்பதில்லை என்றும், போர்வெல் பணி அடிக்கடி நடைபெறுவது கிடையாது. எனவேதான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், சென்னைக்கு வெளியே சென்றால், பல மாவட்டங்களில் இந்த அளவுக்கு கட்டணங்கள் இல்லை. இந்த கட்டண கொள்ளையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த கட்டண கொள்ளை குறித்து கருத்து தெரிவித்துள்ள ‘ புவியியலாளர் ஜே.சரவணன், ஒரு போர்வெல்லின் போது, கடினமான பாறைக்குள் செல்வதற்கு முன் 80 அடி -90 அடிக்கு வண்டல் மண், மணல் அல்லது களிமண்ணை தோண்ட வேண்டும். இதற்கான செலவு குறைவே. ஆனால், போர்வெல் நிறுவனங்கள் மண் பகுதி தோண்டுவதற்கும், பாறைகள் பகுதியை உடைத்து தோண்டுவதற்கும் ஒரே வகையான கட்டணங்களையே வசூலித்து வருகின்றன.
இது நியாயம் அல்ல என்று கூறியவர், தற்போதைய ஆய்வு படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் போர்வெல் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
ஆனால் கட்டண உயர்வு சரி என்பதுபோலவே ரிக் உரிமையாளர்கள் போர்வெல் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர். ரிக் சங்க செயலாளர் ஏ பிரைட் குமார், இதுகுறித்து கூறும்போது, போர்வெல் கட்டணங்கள் தேவையை பொறுத்தே உயர்கிறது என்று தெரிவித்து உள்ளார்.
“நாங்கள் இப்போது 300 அடி முதல் 1,000 அடி வரை போர்வெல்களை போட்டு வருவதாகவும், இதற்கு தேவையான நபர்கள் தற்போது வேலைக்கு கிடைப்பதில்லை என்றும், அத்துடன் சென்னை போட்டி சிட்டிக்குள் வாகனங்கள் நுழைவதற்கு போலீசாரின் தொந்தரவுகள் மற்றும் டீசல் விகிதங்கள் உயர்வுக்கான காரணங்கள் போன்றவைகளால் கட்டண விகிதங்கள் உயர்ந்துள்ளது என்றவர், நாங்கள் தோண்டிய ஒவ்வொரு அடிக்கும் குறைந்தது ஒரு லிட்டர் டீசல் தேவை படுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், சென்னை மக்களோ, போர்வெல் போடும் நிறுவனங்கள் அனைத்தும் ‘மாஃபியா கும்பல்’ போல செயல்பட்டு வருவதாகவும், அவர்களிடம் கேள்வி எழுப்ப யாரும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஒரு வீட்டில் போர்வெல் போடுவது தெரிந்தால், உடனே முன்னாள் கவுன்சிலர்களின் கைத்தடிகள், மாநகராட்சி அதிகாரிகள், அருகிலுள்ள காவல்நிலைய அதிகாரிகள், அதுமட்டுமின்றி காவல்நிலைய ரோந்து சுற்று வாகன அதிகாரிகள் என பல தரப்பினரும் வந்து மாமூல் வசூலிக்க தொடங்கி உள்ளனர். இவர்களின் மாமூலுக்காவே ஒரு குறிப்பிடட்ட தொகை ஒதுக்க வேண்டியது இருப்பதாகவும், இந்த விஷயத்தில் மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.