சென்னை: போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பான அபராதங்களை, இனி க்யூஆா் கோடு மூலம் அபராதம் செலுத்தலாம் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறலில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்டால், இனி க்யூஆா் கோடு மூலம் அபராதம் செலுத்தலாம் என பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பலமடங்காக உயர்த்தப்பட்டதுடன், இந்த அபராத தொகை அனைத்துமே ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியும் செய்து தரப்பட்டது கடந்த 2009ம் ஆண்டு முதல் “கேஷ் லெஸ்” என்ற முறைப்படி நேரடியாக அபராத தொகையை போக்குவரத்து போலீசார் வசூலிக்காமல் ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 2011 முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனையாகவும், பின்னர் மேம்பபடுத்தப்பட்ட வகையில், 2017ஆம் ஆண்டு முதல் முழுமையான டிஜிட்டல் பண பரிவர்த்தனை, யுபிஐ பரிவர்த்தனை முலமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வாகனங்களின் அபராத தொகைக்கான எஸ்எம்எஸ் நமக்கு வந்ததும் தபால் நிலையத்திற்கு சென்று அபராத தொகையை செலுத்தலாம். இதேபோல பேடிஎம் கியூஆர்கோடு முறையிலும், பாரத் ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு மற்றும் ஸ்டேட் பேங்க் இ பேமெண்ட் முறை, இசெலான் கருவியேலேயே ஸ்வைப் மூலம் அபராதம் செலுத்தலாம் என 5 வகையில் அபராத தொகையை போக்குவரத்து காவல்துறை வசூலித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது, கியூ ஆர் கோடு மூலம் வசூலிக்கும் முறையை போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக தினமும் சுமாா் 6 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன. இதுதொடர்பான அபரதங்கள் பல முறைகளில் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இதன் அடுத்தக்கட்டமாக க்யூஆா் கோடு மூலம் அபராத தொகையை செலுத்தும் வசதியை சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு,எஸ்பிஐ வங்கியுடன் சோ்ந்து அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையில் அபராத தொகையை https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற இணையத்தளத்தில் சென்று செலுத்தலாம் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு தெரிவித்தது. இந்த சேவையின் மூலம் எளிதாக அபராத தொகையை செலுத்தலாம் என்றும் அப் பிரிவு தெரிவித்துள்ளது.