சென்னை: சென்னை -திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல ஆண்டு காலமாக, முன்பதிவில்லா ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. தினசரி இருமுறை இயக்கப்பட்டு வந்த இந்த ரயில், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து, முற்றிலும் இயல்பு வாழ்க்கை திரும்பியதால், திருப்பதி பயணிகள் ரயிலை இயக்க பொதுமக்களும், பக்தர்களும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, சென்னை சென்ட்ரல் -திருப்பதி இடையே முன்பதிவு செய்யப்படாத பயணிகள் இயக்கம் மீண்டும் தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதன்படி, இந்த முன்பதிவில்லா ரயில், தினமும் காலை 9:50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து பறப்பட்டு, பிற்பகல் 1:40-க்கு திருப்பதி சென்றடை யும். எதிர்திசையில் பிற்பகல் 1:45 க்கு திருப்பதியில் புறப்பட்டு மாலை 5:15 மணிக்கு சென்ட்ரல் வந்தடைகிறது.
பொதுவாக ரயில் கட்டணம், பேருந்து பயணக் கட்டணத்தை ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பதால், ரயில் சேவையை பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பதி முன்பதிவில்லா பயணிகள் ரயில் சென்னை சென்ட்ரல், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், கடம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.