சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் 386வது பிறந்த நாளையொட்டி  முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில்,  வாழவைக்கும் சென்னை; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. அதாவது தலைநகர் சென்னை உருவான தினத்தை சென்னை தினம் என நாம் கொண்டாடி வருகிறோம்.
இந்தாண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி 386வது சென்னை தினம் (Madras Day) தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை என்பது ஒரு நகரம் மட்டுமில்லை. பல்வேறு கலாச்சாரங்கள், மக்கள், மொழிகள் கொண்டு திகழும் தொன்மையான பகுதி. பழமையான கோயில்கள், கட்டடங்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் இடங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட இப்பகுதி சென்னை என்ற பெயர் 1996ஆம் ஆண்டே மாற்றப்பட்டது.  ஆனால், இந்த நாளை கொண்டாடும் நாளாக கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று சென்னைக்கு  386வது பிறந்தநாள். இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

“எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து,
வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து,
பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து,
எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,
சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,

மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை”.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.