சென்னை

சென்னை நகரில் ஒரு சில தெருக்களின் நுழைவாயிலில் குடியிருப்பு வாசிகள் அனுமதி இன்றி செக் போஸ்ட் அமைத்துள்ளனர்.

சென்னையில் 10,000 க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இவை பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள் என்று பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில் பேருந்து சாலைகளில் நிழற்குடைகள் அமைப்பது, அழகுபடுத்துவது உள்ளிட்ட பணிகள் மற்றும் உட்புற சாலைகளில் மரங்கள் நடுவது, தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சென்னை மாநகராட்சிதான் செய்கிறது.

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான சாலைகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், சென்னை மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.  ஆயினும் சென்னை மாநகராட்சிகளில் ஒரு சில சாலைகளில் குடியிருப்பு வாசிகள் உரிய அனுமதி பெறாமல் ‘செக் போஸ்ட்’ அமைத்துள்ளனர்.  இங்கு யார் வீட்டுக்குப் போகிறோம் என்பதைக் கூறினால் மட்டுமே சாலைகளுக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

குறிப்பாக சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் சாலையில், கங்காதீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் காந்தி அவென்யூ என்ற தெரு உள்ளது.  இத் தெருவின் நுழைவு வாயிலில் அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகள் இணைந்து ‘செக் போஸ்ட்’ அமைத்து, காவலாளி ஒருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.  தெருவில் வசிப்பவர்களைத் தவிர்த்து வேறு யாராவது இந்தத் தெருவுக்குள் வந்தால், ‘யார் வீட்டுக்குச் சொல்கிறோம்’ என்பதை அந்தக் காவலாளியிடம் கூறினால்தான் உள்ளே அனுமதிக்கின்றனர்.

மேலும் ஈ.வெ.ரா பெரியார் சாலையில் நேரு பூங்கா சிக்னல், கே.ஜெ மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஈ.வெ.ரா 2-வது சந்திலும் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.  தவிர சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரி செல்லும் சாலை ஆகிய இடங்களில் இதுபோன்று குடியிருப்பு வாசிகள் சாலையின் நுழைவு வாயிலில் செக் போஸ்ட் அமைத்துள்ளதாகத் தெரிகிறது.  குடியிருப்பு வாசிகள் தங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு செக் போஸ்ட் அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.