சென்னை:

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 4 மாடி கட்டுவதற்கான அனுமதி வாங்கி, முறைகேடாக மேலும் நான்கு மாடி கட்டப்பட்டிருப்பதாக  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகாராய நகரில்  உள்ள  ‘தி சென்னை சில்க்ஸ்’ கட்டிடம் நேற்று அதிகாலை தீப்பிடித்தது எரிய ஆரம்பித்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி, சற்று முன்தான் தீயை முழுதுமாக அணைத்தனர்.

தீ விபத்தில் வெப்பம் தாங்காமல் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.  இந்த கட்டிடம் முழுவதும் சேதமடைந்த நிலையில், முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தீ விபத்து  குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

“ சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு 4 மாடிகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் விதிமுறைகளை மீறி  மேலும் நான்கு மாடிகள் கட்டியிருக்கிறார்கள்.

இதனால் கடந்த 2011-ம் ஆண்டிலேயே  சிஎம்டிஏ அதிகாரிகளால் இக் கட்டிடம் சீல் வைக்கப்பட்டது. மேலும்,  அனுமதி இன்றி கட்டப்பட்டது என்று சிஎம்டிஏ சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.

கடை உரிமையாளர்கள்  நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று தொடர்ந்து கடையை நடத்தி வந்தனர்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர், “ விதிமீறல் கட்டிடங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.  மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கட்டிடங்கள் இருக்கக்கூடாது.

தியாகராய நகரில் உள்ள கட்டடங்களை வரைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.