சென்னை,

தீவிபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் மேல் தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இடிந்துவிழக்கூடிய அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

தி.நகரில் உள்ள பிரபலமான சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை முதல் தீ பிடித்து எரிந்து வருகிறது. வெளிப்பக்கம் எரிந்துவந்த தீ கட்டுப்படுத்தப்பட்டாலும், உள் பகுதியில் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

சுமார் 8மணி நேரத்திற்கும் மேலாக  தீ எரிந்து வருவதால், கடையினுள்ள  இன்டீரியர் செய்யப்பட்ட பகுதிகள் அனைத்தும் உடைந்து நொறுங்கி வருகின்றன.. இதனால் அப்பகுதி முழுவதும் புதை மண்டலமாக காணப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த  அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தீ எரிந்து வரும் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தரைதளமும் பலமிலந்து வருவதாக தீ அணைப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தீயானது 7 மாடிகளுக்கும் பரவி உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து அனைவரையும் போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

தடுப்புக்கள் அமைத்து வாகனங்கள் அப்பகுதிக்கு வராமல் தடுக்கப்பட்டு வருகிறது.

தீ எரிந்துகொண்டிருக்கும் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் சென்ற ஆய்வு செய்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  கீழ் தளத்தில்  ஏற்பட்ட தீ, தொடர்ந்து மேல் தளத்திற்கு பரவி வருகிறது. இதில் மனித உயிர்களுக்கு பாதிப்பு கிடையாது. கடையில் இருந்த 14 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். துணிக்கடை என்பதால், தீ வேகமாக பரவி வருகிறது. இந்த பகுதிக்கு மக்கள் யாரும் வர வேண்டாம். வணிகர்கள் கடையை திறக்க வேண்டாம்.

அருகில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பீதியடைய தேவையில்லை. அவர்கள் சற்று தொலைவில் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வாகனங்களும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தீயை அணைப்பது தான் பிரதான முயற்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.