கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில், சைதாப்பேட்டை. சென்னை
தல சிறப்பு :
அம்மன் சுயம்பு வடிவிலும் அருள்பாலிப்பது சிறப்பு.
பொது தகவல் :
இங்கு விநாயகர், சப்த கன்னியர், அண்ணன்மார்கள் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.
தலபெருமை :
கோயிலில் உள்ள புற்றுச் சன்னதி ரொம்பவே விசேஷமானது எனப் போற்றப்படுகின்றனர் பக்தர்கள். சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக்கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும்; சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், சந்தான பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு (ராகு காலம் நிறைவுறும் நேரம்) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தித்தால், கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!
இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டில் எந்த விசேஷம் வைபவம் என்றாலும், இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனின் திருப்பாதத்தில் முதல் பத்திரிகையை வைத்துவிட்டே அடுத்தடுத்த வேலைகளைத் துவங்குகின்றனர். அப்படி அழைத்தால், அந்த விழாவை அம்மனே முன்னின்று சிறப்பாக நடத்தி அருள்வாள் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள் கோயிலில் வேப்பமரமும் பனைமரமும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. வேப்பமரத்துக்கு மஞ்சள் சரடு கட்டி சின்னம்மனை வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!
ஆடி மாதம் வந்துவிட்டால் சின்னம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தினமும் வந்தவண்ணம் இருப்பார்கள், அமாவாசைக்குப் பிறகு வருகிற வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது பிரம்மோத்ஸவ விழா! இந்தப் பத்து நாட்களும், தங்களது பிரார்த்தனை நிறைவேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொங்கல் படையலிட்டும் அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
இந்த நாளில் சிறப்பு அலங்காரம் விசேஷ பூஜை திருவீதியுலா என அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும் 9-ஆம் நாள் விழாவில் திருவீதியுலா, பொங்கல் படையல், அக்னிக் கரகம் எடுத்து ஆடுதல்…. என ஊரே அமர்க்களப்படும். 10-வது நாள், அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெறும். கார்த்திகையில் 108 சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெறும். அம்மை முதலான நோய் கண்டவர்களுக்கு சங்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.
தல வரலாறு :
சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயம் இது. இந்தப் பகுதி மக்களுக்கு சின்னம்மன்தான் இஷ்டதெய்வம் காவல் தெய்வம் எல்லாமே! அழகிய கோபுரத்துடன் திகழ்கிறது கோயில் நுழைவாயிலின் வலப்புறத்தில் மதுரை வீரனும் இடப்புறத்தில் காத்தவராயனும் காட்சி தருகின்றனர். உள்ளே கருணையும் உக்கிரமும் பொங்க, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் சின்னம்மன்.
திருவிழா :
ஆடிவெள்ளி, ஆடிசெவ்வாய்.
பிரார்த்தனை :
கடன் தொல்லைகள் தீர கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
பக்தர்கள், பொங்கல் படையலிட்டும், அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும், மஞ்சள் சரடு கட்டியும் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.