சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலககோப்பை லீக் தொடர் நடைபெற்றபோது, தேசிய கொடியுடன் வந்த ரசிகர்களிடம் அதை பறித்து, குப்பை தொட்டியில் வீசி, அவமரியாதை செய்த எஸ்ஐ பணி நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை பணி இட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில் இந்தியர்கள் தேசிய கொடியை கிரிக்கெட் மைதானத்துக்குள் கொண்டு செல்ல முடியாத நிலைமையை திமுக அரசு ஏற்படுத்தியது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த மக்கள் விரோத செயல், சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது நடைபெற்றது. இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. திமுக அரசுக்கு இந்திய அரசுக்கு எதிராகவும், தேசபற்று இன்றி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. அதை நிரூபிப்பது போலவே காவல்துறையினரின் நடவடிக்கை காணப்பட்டது. இது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.
ஆனால், கிரிக்கெட் மைதானத்தை பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான், தேசிய கொடி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை கூறியது. நாடு வேறுபாடுகளை கடந்து இரு அணிகளுக்கும் ஆதரவாக சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்ததாலும், இஸ்ரேல் பாலஸ்தீன கொடிகளும் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலினி பேரிலும்தான் கொடிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், நமது நாட்டு மூவர்ண கொடிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. நமது கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டு சென்ற இந்திய கொடிகைளை, செம்பியம் பகுதி எஸ்ஐ நாகராஜன் பறிமுதல் செய்து அதனை முதலில் குப்பை தொட்டியில் போட முற்பட்டார். இதற்கு பலர் ஆட்சேபனை தெரிவித்தவுடன் அதனை வாகனத்தில் வைத்துக்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதை தொடர்ந்து, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத நடவடிக்கை கேள்விக்குறியானது. இதையடுத்து, இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், எஸ்ஐ நாகராஜன் செம்பியம் காவல் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியமர்த்தப்பட்டார். கொடியை அவமதித்த எஸ்ஐ பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அவரை ஒப்புக்கு சப்பானியாக பணியிட மாற்றம் செய்து, சென்னை கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.