சென்னை

புத்தாண்டு கொண்டாட்ட குறித்து சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று நாடெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.   தமிழகத்தில் நேற்று வரை 43 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதையொட்டி தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.   அவ்வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குச் சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

அவை பின் வருமாறு

  1. சென்னை நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், வில்லா ஆகிய இடங்களில் வசிப்போர் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தக் கூடாது.
  2. உல்லாச  விடுதிகள், பண்ணை வீடுகள் மாநாட்டு அரங்குகள், கிளப்புகளில் வர்த்தக ரீதியாகப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  3. இரவு 11 மணி வரை மட்டுமே ஓட்டல்கள், தங்கும் வசதி கொண்ட உணவகங்கள் செயல்பட வேண்டும்.  மேலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது
  4. சென்னை, காமராஜர் சாலை, ஆர் கே சாலை, ராஜாஜி சாலை, அண்ணா சாலை, ஜி எஸ் டி சாலை ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாடக்கூடாது.  மேலும் புத்தாண்டை முன்னிட்டு பைக் ரேஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  5. சென்னை மெரினா, பெசண்ட் நகர், நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்படுகிறது.  மேலும் டிசம்பர் 31 இரவு 9 மணி முதல் இங்கு வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது.

என அறிவிக்கப்பட்டுள்ளது.