சென்னை:
சென்னையில் சாலையோர கடைகளில் பூனைக்கறி பிரியாணி விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய தலைமுறையினரிடம் பிரியாணி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல்கள் மட்டுமின்ற புற்றீசல் போல் சாலை ஓரங்களிலும் நூற்றுக் கணக்கான பிரியாணி கடைகள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பீப் பிரியாணி என்று விற்பனை செய்யப்படுகிறது. இவை குறைந்த விலைக்கு கிடைக்கிறது.
இறைச்சி கடைகளில் மட்டன், சிக்கன், பீப் இறைச்சி விற்பனை விலைக்கும், இவர்களின் பிரியாணி விலைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது. இறைச்சி கழிவுகளை கொண்டு பிரியாணி தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் நாய் கறி, காக்கா கறி என்று தகவல்கள் பரவின. தற்போது இதில் ஸ்பெஷலாக பூனைக்கறி கலப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் ஆவடி, பல்லாவரம், திருமுல்லைவாயல், பூம்பொழில் நகர், கன்னிகாபுரம் போன்ற புறநகர் பகுதிகளில் நரிக்குறவர்கள் குடியிருப்பு அருகே அமைந்துள்ள சாலையோர கடைகளில் பூனை பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதற்கு ஏற்றார்போல் ராயப்பேட்டை பாலாஜி நகர் உள்பட சில பகுதி வீடுகளில் வளர்ககப்பட்ட பூனைகள் மாயமாகியிருப்பதாக புகார்கள் வந்தது. தனிப்படை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து நரிக்குறவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது திருமுல்லைவாயலில் உள்ள நரிக்குறவர்களிடம் சோதனை நடத்தியபோது சாக்கு மூட்டைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 12 பூனைகளை போலீசார் கைபற்றினர். இவை பிரியாணி தயாரிப்பவர்களுக்கு விற்பனை செய்ய அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பூனைக்கறி வேண்டும் என்று விரும்பி கேட்பவர்களுக்கு மட்டுமே இவை விற்பனை செய்யப்படும் என்று நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்
போலீசார் அந்த பூனைகளை மீட்டு செங்குன்றம் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் 3 பூனைகள் இறந்த நிலையில் கிடந்தன. பூனைக்கறி மூலம் பிரியாணி செய்து விற்பனை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.