சென்னை

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வாட்ஸ்அப் குழு ஒன்றை ராயப்பேட்டை உதவி காவல் ஆணையர் பாஸ்கர் அமைத்துள்ளார்.

சென்னை நகரில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயால் பாதிக்கபடவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோயாளிகள் சொந்த தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதால், அவர்களுக்கு மன அழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது . அவர்களுக்கு நம்பிக்கை மற்றும் அறுதல் அளிக்கும் வகையில் ராயப்பேட்டை உதவி காவல் ஆணையர் எம்.எஸ்.பாஸ்கர் நூற்றுக்கணக்கான நோயாளிகளை இணைத்து புதிய வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்துள்ளார்

இந்தக் குழுவைப் பற்றி காவல்துறை உதவி ஆணையர் அதிகாரி பாஸ்கர், “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நம்பிக்கை அளித்து உற்சாகப்படுத்தவே அதிகாரிகள் மற்றும் கோவிட் எதிர்ப்பு குழு என்கிற பெயரில் இந்த குழுவை அமைத்துள்ளோம்.  இந்த குழுவில் மைலாப்பூர் உதவி காவல் ஆணையர் (டி.சி.பி) தேஷ்முக் சேகர், சென்னை பெருநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத் தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி மருத்துவர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த குழுவின் முக்கிய உறுப்பினர்கள் ஆவார்கள்.

இந்த அதிகாரிகளுடன் ராயப்பேட்டை மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 133 நோயாளிகளைக் கொண்டு இந்த குழு கடந்த ஜூன் – 1ந்தேதி உருவாக்கியுள்ளோம்.   அவர்களுடைய தனிமைப்படுத்தலின் போது சமூக உணர்வை உருவாக்குவதன் மூலமும், இரண்டு வார காலத்தில் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதன் மூலமும் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே இந்த குழுவின் நோக்கமாகும் .

இத்தகைய செயல்பாட்டினால் தனிமைப்படுத்தலை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் வைரசுக்கான நேர்மறை சோதனை செய்யும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான நடைமுறைகள் குறித்து அவர்களை உணர வைக்க முடிகிறது. இந்த குழுவில் அதிகாரிகள் மற்றும் பிற வல்லுநர்கள் COVID-19 பற்றிய உண்மைகளையும் தினசரி முன்னேற்றங்களையும் இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அத்துடன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பாராசிட்டமால் மற்றும் ஜின்கோவிட் (ஊட்டச்சத்து ட்ரிப்ஸ் ) போன்ற மருந்துகளை எப்படி, எப்போது எடுத்துக்கொள்வது என்பது குறித்த மருத்துவர்களின் குரல் வழி குறிப்புகள் மற்றும் டிஜிட்டல் போஸ்டர்கள் குழுவில் அளிக்கப்படுகின்றன. . ஒருவர் மருத்துவமனைக்கு எப்போது செல்ல வேண்டும், குடும்ப உறுப்பினர்களை எவ்வாறு தனிமைப்படுத்துவது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உதவிக் குறிப்புகள் பற்றியும் நிபுணர்கள் ஆலோசனை அளிக்கின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

குழுவில் உள்ள நோயாளி ஒருவர்,  “இந்தக் குழுவில் வெளியாகும் குரல் மூலமான குறிப்புகள் தமிழில் உள்ளன  என்பதால் ஆங்கிலம் தெரியாத நோயாளிகள் கூட புரிந்துகொள்ள முடிகிறது, அத்துடன் குழு அனைவரையும் உள்ளடக்கியது. என்பதால் நோயாளிகள் அதிகாரிகளுடன் கேள்விகள் கேட்கின்றார்கள். உணவு சமைத்தல், சுத்தம் செய்தல், தொடர்பு ஏற்பட்ட இடங்களைச் சுத்தப்படுத்துதல், வயதான குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வது உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்வதற்கான அவசியங்கள் குறித்த தகவல்கள் குழுவில் அளிக்கப்படுகிறது.

இந்த குழுவை அமைத்த அதிகாரி பாஸ்கர் ‘கவலைப்படாதே, மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார், ” இது எங்களுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது” எனக் கூறி உள்ளார்.