கரூர்: கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் பாஜக, தவெகவை சேர்ந்தவர்களையும், காவல்துறை ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஏற்கனவே சவுக்கு சங்கர் வழக்கில் கைது செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்று மீண்டும் பணியாற்றி வருகிறார். இவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் உயிர்பலிக்கு திமுக அரசுதான் காரணம் என கூறி, அதுதொடர்பான வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் ஆம்புலன்சில் தவெக கொடி கட்டி சென்றது குறித்து விஜய் பேசியதையும் சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டை சென்னை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கலை கலாசார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (வயது 38), மாங்காட்டை சேர்ந்த தவெக உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடி தவெக உறுப்பினர் சரத்குமார் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://patrikai.com/senthil-balajis-conspiracy-is-responsible-for-the-karur-41-people-stampede-death-tvk-lawyer-directly-alleges-that-he-has-evidence/