சென்னையில் 50 ரூபாய் நோட்டைக் காட்டி ரூ. 3 லட்சம் அபேஸ் செய்த ஆந்திர ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த பாரதி என்பவர் ஜூலை 3 ம் தேதி வளசரவாக்கம் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பைக் பெட்ரோல் டேங்க் மீதுள்ள பையில் வைத்து வண்டியை ஒட்டிச் சென்றுள்ளார்.

வண்டியை வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு வாயில் கதவை திறக்க முற்பட்டபோது அவரைப் பின்தொடர்ந்த ஆசாமி ரோட்டில் 50 ரூபாய் நோட்டு விழுந்துள்ளது அது உங்களுடையதா என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து பைக்கில் இருந்து இறங்கிய பாரதி அசந்த சமயம் பார்த்து அவரது பைக்கில் இருந்த ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த பலே திருடன் ஓடினான்.

இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு திருடனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

அதில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. இவர் மீது திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட், பள்ளிப்பேட் காவல்நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று ராஜசேகரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 35,000 ரொக்கத்தை மீட்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.