சென்னை:
சென்னையில் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை நகரம்  பொதுமக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இவற்றை தடுக்க போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லையோ என்ற அதிருப்தி பொதுமக்களிடையே பரவலாக ஏற்பட்டு உள்ளது.
criminal
இதுபற்றி பொதுமக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் அரசையும், காவல்துறையையும் வசைபாடி வருகின்றனர். இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
இதன் காரணமாக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பழைய குற்றவாளிகள் தற்போது என்ன செய்கிறார்கள் என ஆராய்ந்து கைது செய்யும் படலம் ஆரம்பமானது. நேற்று இரவு மாநகரம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த அதிரடியால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ரெய்டின்போது போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்தி,  வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனர்.  முக்கியமான ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த ஒரு நாள் ரெய்டின்போது, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், தலைமறைவாக இருந்தவர்கள் , வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
நேற்று இரவு முழுவதும் நடைபெற்ற இந்த ரெய்டில் சந்தேகத்தின் பெயரில் சுமார் 480 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். முக்கிய குற்றப்பிரிவுகளில் கீழ் 17 பேரும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் 82 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்  என்றும்  யு.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறுகிறது. ஆனால் போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.