சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் முனையங்களைத் தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்றும் பணிகளை தெற்கு ரயில்வே நேற்று துவங்கியுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) இரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) இன்னும் 10 நாட்களில் ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும்.

பொது தனியார் கூட்டாண்மை (Public Private Partnership – PPP) அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர் விரைவில் இறுதி செய்யப்படுவார். பணியைத் தொடங்கும் காலத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் முழு மறுசீரமைப்பு பணியும் முடிக்கப்படும்.

தாம்பரம் யார்டில் மறுவடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரயில்களின் திறனை அதிகரிக்கவும், பயணிகள் நெரிசலை குறைக்கவும் உதவும்.

இதனைத் தொடர்ந்து சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தை சென்னையின் நான்காவது ரயில் முனையமாக மாற்றும் நடவடிக்கை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை நான்காவது ரயில் முனையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததை காரணம் காட்டி பெரம்பூரில் நான்காவது ரயில்நிலையம் அமைப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா உடன் நடைபெற்ற ரயில்வே பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலை அடுத்து நில அளவீட்டு பணிகளை துவங்க ரயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள கிளாம்பாக்கத்தில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய ரயில் நிலையம் அடுத்த ஆண்டு மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.