சென்னை:

ருவ மழை  பொய்த்து போனதை தொடர்ந்து தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னையில் குடிதண்ணீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வறண்டுபோனதால், தண்ணீருக்காக மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னையை சுற்றி உள்ள ஐடி நிறுவனங்கள், ஊழியர்களின் தேவைக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலையில், வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் என ஊழியர்களை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு போயுள்ளன. அதுபோல, சென்னைக்கு தண்ணீர் தரும் ஆந்திராவும் கிருஷ்ணா நீர் சரியாக கொடுக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக  சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீரும் குறைந்து போனதால் பொது மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். ஒரு விவசாய நிலங்களில் உள்ள தண்ணீரை தனியார் லாரிகள் எடுத்துவந்து குடம் ரூ.10 என விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள்  பெருமளவில் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலை பகுதிகளிலும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. சென்னை அடையாறு டைடர் பார்க் முதல் சோழிங்கநல்லூர், சிறுசேரி சிப்காட்  வரை  வரை ஆயிரக்கணக்கில் ஐடி நிறுவனங்கள் உள்ள நிலையில் பல்லா யிரக்கணக்கானோர் அங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும்பாலான நிறுவனங்கள் திணறி வருகின்றன.

இதன் காரணமாக பல ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தி வருகிறது. மேலும் பல நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளன. பல நிறுவனங்கள் தங்களின் தேவைக்கான குடிதண்ணீரை ஊழியர்களே கொண்டு வரும்படி கூறி உள்ளன.

ஒ.எம்.ஆர் பகுதிகளுக்கு  நாள் ஒன்றுக்கு  3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக கூறப்படு கிறது. பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை லாரிகள் மூலம் கொண்டு வந்த நிரப்பி உபயோகப்படுத்தி வருகின்றன. இவற்றில் 60 சதவிகித தண்ணீர் ஐடி நிறுவனங்களால் பயன்படுத்தி வருகின்றன.

இந்j நிலையில் ஓ.எம்.ஆர்-ல் ஐடி நிறுவனங்கள் அடுத்த 100 நாட்களுக்கு தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்.  அங்குள்ள12 கம்பெனிகளில் பணிபுரியும் சுமார் 5,000 என்ஜினியர்கள் தங்கள் வசதியான இடத்திலிருந்து வேலை செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேபோல், சோழிங்கநல்லூரில் உள்ள ஃபோர்டு பிசினஸ் சர்வீஸ் நிறுவனம், தங்கள் பணியாளர் களை குடிநீரை கொண்டுவரும் படி அறிவுறுத்தியுள்ளது. தங்களுக்கு தேவையான தண்ணீர் அளவில் 55% நீரை மட்டுமே நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

குறிப்பாக சிப்காட் ஐடி பகுதியில் 46 ஐடி நிறுவனங்கள் உள்ளன. அவற்றிற்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. இதற்கு அங்குள்ள 17 கிணறுகளிலிருந்து தண்ணீர் தரப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அங்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், நாள் ஒன்றுக்கு  ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, சிறுதொழில் முதல் அனைத்து தொழில்களும் முடங்குவது மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி அரசு இனிமேலாவது  முழிக்குமா?