டெல்லி: சென்னை விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் மொத்தமுள்ள விமான நிலையங்களில் 25 விமான நிலையங்கள் மட்டுமே வரும் 2025ம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்தியஅமைச்சர், தேசிய பணமாக்கக் கொள்கையின் அடிப்படையில், இந்திய விமான நிலையக் கழகத்துக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, திருப்பதி, வாராணசி, போபால், சூரத், மதுரை, பாட்னா, நாக்பூர் உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 – 25ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தவிர, இந்திய விமான நிலையக் கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் உள்பட 8 விமான நிலையங்களை பொதுத் துறை – தனியார் கூட்டமைப்பில் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நீண்டகாலத்துக்கு மேற்கொள்ளும் வகையிலான குத்தகையில் இயக்கி வருகிறது.
விமான நிலையங்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் வரும் வருவாயை, மத்திய அரசு நாடு முழுவதும் விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகளுக்காக செலவிட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.