சென்னை மாநகர பேருந்து பயணத்தை இனிமையான அனுபவமாக மாற்ற மேம்படுத்தப்பட்ட புதிய செயலியுடன் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை.

பயணிகள் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எளிதாக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் புதிய செயலி மூலம் டிக்கெட் வாங்க பெருநகர போக்குவரத்துக் கழகம் தயாராகி வருகிறது.

தற்போதுள்ள சென்னை பஸ் செயலிக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய செயலி மாற்றப்படும்.

புதிய செயலியானது, தற்போதுள்ள சென்னை பஸ் செயலியின் பயணத் திட்டமிடல் அம்சத்துடன், பேருந்துகளின் இருப்பிடம் மற்றும் டிக்கெட் முறையை மிகவும் துல்லியமாக வழங்கும் என்று கூறப்படுகிறது.

தவிர, இதன் பயன்பாடு குறித்து பயணிகள் கருத்துக்களை வழங்க முடியும், இதனால் ஆயிரக்கணக்கான மக்களின் பயணத்தை சீராக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 500 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் 71 பேருந்து நிறுத்தங்களில் LED டிஸ்ப்ளே போர்டுகள் மூலம் பயணிகளுக்கு பேருந்து வருகை நேரம் உள்ளிட்ட மற்ற தகவல்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பைக் (CITS) கொண்டு தானியங்கி வாகன இருப்பிட அமைப்பு (AVLS) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்பாடுகள் நிறைவடைந்த பின் பேருந்து நிறுத்தங்களில் LED பலகைகள் அமைக்கப்பட்டு ஜிபிஎஸ் தரவுகளின் அடிப்படையில், பேருந்து எதிர்பார்க்கப்படும் வருகை நேரம் (ETA) காட்டப்படும்.

மேலும், டிரைவருக்கும் கட்டுப்பாட்டு அரைக்கும் ஆன்போர்டு யூனிட்டைத் தவிர, இருவழித் தகவல் பரிமாற்றத்தை அனுமதிக்கும் வகையில் ஒரு டிரைவர் கன்சோலும் நிறுவப்படும். இதன் மூலம் ஒரே வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அணிவகுத்து செல்லாமல் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த மேம்படுத்தப்பட்ட புதிய செயலியுடன் கூடிய ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மூலம் பயணிகளுக்கு பேருந்து பயணம் இனியமாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.